3 மாத இடைவெளிக்குப் பின்... பாகிஸ்தான் வான்வழி பறந்த சுஷ்மா ஸ்வராஜ் விமானம்... இது தான் காரணம்
இந்திய விமானப்படை நடத்திய பாலாகோட் தாக்குதலுக்குப் பின் 3 மாதமாக பாகிஸ்தான் வான்வெளியில் வேற்று நாட்டு பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு அனுமதியின் பேரில் நமது நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் அந்நாட்டு வான்வெளியில் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் புல்வாமாவில் பாக். ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 40 பேர் உயிர் நீத்தனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாலா கோட்டில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம் அதிகரிக்க, பிப் 26-ந்தேதி முதல் பாகிஸ்தான் வான்வெளியில் அயல்நாட்டு விமானங்கள் எதுவும் பறக்க தடை விதித்தது அந்நாட்டு அரசு.
இதனால் இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் பயணிகள் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.தினசரி 350 விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மாற்று வழியில் இயக்கப்பட்டதால் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு வீணானது. இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனத் திற்கு மட்டும் எரிபொருளுக்காக மட்டும் தினசரி 7 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவானது.
இந்நிலையில் தான் 3 மாத இடைவெளிக்குப் பின் கடந்த வாரம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் செய்த விமானத்தை மட்டும் தன் நாட்டு வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் அரசு அனுமதியளித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கடந்த 21-ந் தேதி கிர்கிஸ்தான் நாட்டில் பல்வேறு உலக நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.இதில் சுஷ்மாவும் பங்கேற்கச் சென்றார். பாகிஸ்தான் வான்வெளியைக் கடந்து சென்றால் 2 மணி நேரம் தான் பயண நேரம். பாகிஸ்தான் தடையால் வேறு ரூட்டில் சுற்றிச் சென்றால் 6 மணி நேரத்திற்கும் மேல் ஆகும்.
இதனால் எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டனர் இந்திய அதிகாரிகள் . என்ன ஆச்சர்யமோ தெரியவில்லை, சுஷ்மாவுக்கு சிறப்பு அனுமதி கிடைக்க பாகிஸ்தான் வான்வெளியில் கிர்கிஸ்தான் சென்று விட்டு மறு நாள் அதே ரூட்டில் சுஷ்மா திரும்பியுள்ளார்.
இந்நிலையில் எல்லையில் ஓரளவுக்கு பதற்றம் தணிந்துள்ள நிலையில், தன் நாட்டு வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விலக்குவது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்கும் வரும் 30-ந் தேதியன்று இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டு நட்பு பாராட்டினாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது.