மகளின் திருமண விழாவில் உற்சாகமாக பாடிய எஸ்.ஐ... நொடியில் உயிர் போன சோகம்
கேரளாவில் மகளின் திருமண விழாவில் நடந்த இசைக்கச்சேரியில் உற்சாகமாக பாடிய தந்தை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரா அருகிலுள்ள புத்தன்துராவைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத்.54 வயதான இவர் திருவனந்தபுரத்தில் போலீஸ் எஸ்.ஐயாக பணி புரிந்து வந்தார். இவருடைய இளைய மகள் ஆர்சா பிரகாசுக்கு நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது.
முதல் நாள் இரவில் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி நீண்டகரா பரிமளம் கோவில் வளாகத்தில் வெகு உற்சாகமாக நடைபெற்றது.விழாவில் இன்னிசைக் கச்சேரியும் களைகட்டியது. ஆடல், பாடல் என விழாவில் உறவினர்கள் உற்சாக துள்ளல் போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இசைப்பிரியரான மணமகளின் தந்தை விஷ்ணுபிரசாத், திடீரென கச்சேரி மேடையில் ஏறி தானும் ஒரு பாடல் பாட ஆரம்பித்தார்.மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அமரம் என்ற படத்தின் பாடலை விஷ்ணுபிரசாத் ரசித்து பாடிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல் திருமணமாகி செல்லும் மகளுக்கு தந்தை வாழ்த்துச் சொல்லும் பாடலாகும். பாடலின் இடையில் இசையில் லயித்துக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் திடீரென மேடையில் சரிந்தார். இதைக் கண்ட விருந்தினர்கள் அதிர்ச்சியில் உறைய அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவருடைய உயிர் பிரிந்து விட்டது.
ஆனாலும் காலையில் திருமணம் ஒரு வித இறுக்கமான சூழலில் நடந்தேறி விட்டது. அப்போது தந்தையை காணாது தவித்த மணமகளிடம், அவருடைய தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி சமாளித்துள்ளனர். இந்த சோகமான சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது பெரும் வைர லாகி வருகிறது.