தீண்டத்தகாத கட்சி, வன்முறை _ பா.ஜ.க.வுக்கு எப்போதும் 2 சவால்
பா.ஜ.க. எப்போதும் 2 சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று வாரணாசியி்ல் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 303 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டு தோற்ற அமேதி தொகுதியில், பா.ஜ.க. தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போல், மேற்கு வங்கத்தில் ஒரு பா.ஜ.க. தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தனது சொந்த தொகுதியான வாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஜனநாயகத்தை கடைபிடிக்கிறோம். ஆனால், சில மாநிலங்களில் அரசியல் மாறுபாடுகளால் எங்கள் தொண்டர்கள் கொலை செய்யப்படுகின்றனர். எங்கள் கட்சியை அரசியலில் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கிறார்கள்.
அதிலும் நாங்கள் அமோக வெற்றி பெற்ற பிறகு, இப்போது எங்களை அரசயலில் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சித் தொண்டர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பா.ஜ.க. எப்போதும் சந்திக்கும் 2 சவால்கள் இவை.
இன்று நாட்டிலேயே ஜனநாயக கட்சியாக திகழ்வது பா.ஜ.க.தான். மேற்கு வங்கத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்து நாங்கள் கடந்த தேர்தலை விட 16 தொகுதிகளில் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு மோடி பேசினார்.