வாட்டி வதைக்கிறது வெயில் சென்னையில் குடிநீர் பஞ்சம்
சென்னையில் அக்னி வெயில் கொளுத்தி வரும் நிலையி்ல், இன்னொரு புறம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக உள்ளது. மே 4ம் தேதி தொடங்கிய அக்னி வெயில், வரும் 29ம் தேதி முடிகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஓரிரு நாள் மழை பெய்திருக்கிறது. ஆனால், சென்னையில் கோடை காலம் தொடங்கியது முதல் மக்களளை வெயில்தான் வாட்டி வருகிறது. பகலில் மாநகரின் முக்கியச் சாலைகளில் ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. வாகனப் போக்குவரத்தும் குறைந்து விட்டது.
இந்நிலையில், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர். தினமும் குறைந்தது 2 முறை குளித்தால்தான் உடல் தாங்கும் என்ற நிலையில், ஒரு முறையே குளிக்க முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்துள்ளது. குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் மக்கள் நள்ளிரவில் தெருக் குழாய்களில் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். திருவான்மியூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் கடல் நீர் வருவதால், மக்கள் மெட்ரோ வாட்டரை நம்பியிருக்கின்றனர்.
ஆனால், கடந்த ஒரு வாரமாக சென்னை குடிநீர் வாரியம், பல வார்டுகளில் குழாய் மூலம் தண்ணீர் சப்ளையை நிறுத்தி விட்டது. அதே சமயம், லாரிகளில் தண்ணீர் சப்ளை நடைபெறுகிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் லாரிக்கு தொடர்பு கொண்டால், ஆன்லைனில் லாரிக்கு புக்கிங் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், அப்படி புக்கிங் செய்தால், ஒரு லாரி தண்ணீர் அனுப்புவதற்கு ஒரு வாரம் ஆகிறது. தனியார் லாரிகளும் கார்ப்பரேட் கம்பெனிக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றன. இதனால், மக்கள் தண்ணீர் பஞ்சத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3251 மில்லியன் கன அடி. ஆனால், தற்போது இருக்கும் நீரின் அளவு வெறும் 79 மில்லியன் கன அடிதான். சோழாவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. ஆனால், நீர் இருப்பு வெறும் 2 மில்லியன் கன அடிதான்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பதோ வெறும் 7 மில்லியன் கன அடிதான். செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. நீர் இருப்பு ஒரு மில்லியன் கன அடிதான். சென்னை ஏரிகளின் மொத்த கொள்ளவு 11,257 மில்லியன் கன அடி. ஆனால், தற்போது வெறும் 89 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே நாளில் 3016 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. இப்போது வெறும் 89 கன அடியாக குறைந்து விட்டது.இந்த சூழலில், மழை வந்தால்தான் ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை மக்களின் தண்ணீர் பிரச்னை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.