நாட்டின் நீண்ட கால முதலமைச்சர் விலகினார் : ஆட்சியை பிடித்தார் சிஷ்யன்
சிக்கிம் மாநிலத்தில் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த பவன்குமார் சாம்ளிங், தேர்தலில் தனது கட்சி தோற்றதை அடுத்து விலகினார். அவரது சிஷ்யனாக இருந்து பிரிந்த பி.எஸ்.கோலே புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு, கடந்த 1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 23 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்து சாதனை புரிந்தார். அந்த சாதனையை சிக்கிம் மாநில முதலமைச்சராக நேற்று(மே27) வரை இருந்த பவன்குமார் சாம்ளிங் முறியடித்தார்.
இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக பணியாற்றியிருக்கிறார். நாட்டிலேயே நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்று முதலிடத்தை பிடித்தவர்.
சாம்ளிங்கின் ‘சிக்கிம் ஜனநாயக முன்னணி’ கட்சியில் அவரது சிஷ்யனாக இருந்தவர் பி.எஸ்.கோலே என அழைக்கப்படும் பிரேம்சிங் தமாங் ஆரம்பத்தில் பள்ளி வாத்தியாராக பணணியாற்றியவர். அந்த பதவியை விட்டு விலகி, சாம்ளிங் கட்சியில் சேர்ந்து 1994 முதல் 2009ம் ஆண்டு வரை அமைச்சராகவும் இருந்தார்.
பின்னர், சாம்ளிங்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து 2013ம் ஆண்டில், ‘சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா’ என்ற கட்சியை துவக்கினார். 2014ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு 10 இடங்களை பிடித்தார்.
சிக்கிமில் மொத்தம் 32 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், கோலேயின் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி, 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 15 இடங்களில் வென்ற சாம்ளிங் ஆட்சியை இழந்தார். இதையடுத்து, 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த சாம்ளிங் பதவி விலகினார்.
சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் மே 27ம் தேதி நடந்த விழாவில், புதிய முதலமைச்சராக கோலேவுக்கு கவர்னர் கங்கா பிரசாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற கோலே முதலில் பிறப்பித்த உத்தரவுகளி்ல் முக்கியமான ஒன்று, அரசு ஊழியர்களை குஷிப்படுத்தியது. அங்கு இது வரை சனிக்கிழமை அரசு வேலை நாளாக இருந்தது. தற்போது சனிக்கிழமை அரசு விடுமுறை என்று கோலே அறிவித்திருக்கிறார்.