பதவி விலகுவதில் ராகுல் உறுதி? கலகலக்கிறது காங்கிரஸ்
நாடளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கலகலத்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளதால், மக்களவை கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.
நாட்டை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, 2014ம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதன்பின், 5 ஆண்டுகளில் மீண்டு விட முடியாமல் இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்க முடியாமல் தோற்றுள்ளது. தோல்வி குறித்து விவாதிப்பதற்காக கூடிய செயற்குழு கூட்டத்தில், தான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார்.
ஆனால், அதை மற்ற தலைவர்கள் ஏற்கவில்லை. அப்போது மூத்த தலைவர்களில் ஒருவர், ‘‘நீங்கள் விலகினால் பிரியங்கா காந்தியை தலைவராக்கலாம்’’ என்று ஆலோசனை கூறினார். இதை கேட்டு ராகுல் கோபமடைந்தார். தங்கள் குடும்பத்தில் யாருக்கும் பதவி வேண்டாம், வேறொருவர் தலைமை ஏற்று கட்சியை நடத்துங்கள் என்று கூறினார்.
இதன்பின்பும், ராகுல்காந்தி தனது விலகல் முடிவில் உறுதியாக இருக்கிறார். அதனால், ஒரு மாத இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் செயற்குழு கூடும் என தெரிகிறது. அதற்குள் மூத்த தலைவர்கள் ஆலோசித்து புதிய தலைவராக யாரைக் கொண்டு வரலாம் என்று கூறுமாறு ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, ராகுல்காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவோ, மக்களவை காங்கிரஸ் குழு தலைவராகவோ பதவி வகிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, நாடாளுமன்றத்தில் மட்டும் கட்சியை வழிநடத்த ராகுல்காந்தி ஒப்புக் கொள்வார் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரிபுன் போரா, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் என்று மாநில தலைவர்கள் பலரும் பதவி விலகுவதாக கூறி, ராஜினமாக கடிதங்களை அனுப்பியுள்ளனர். தற்போது கட்சியை யார் வழிநடத்துவார், புதிய தலைவர்களாக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்களா? மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டால் மீண்டும் உட்கட்சிப் பூசல்கள் வெடிக்குமா என்று பல்வேறு சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
தோல்விக்குப் பின்பும் காங்கிரசுக்கு எதிரான செய்திகளே மீடியாக்களில் வலம் வருவதால் மூத்த தலைவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயுள்ளனர். கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘இப்போதும் காங்கிரசைப் பற்றிய தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. விரைவில் கட்சி நிர்வாகிகள் மாற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடக்கும். புதிய உத்வேகத்துடன் கட்சி செயல்படும்’’ என்றார்.