ஜுன் 10-ல் சட்டசபை கூடுகிறது... நம்பிக்கையில்லா தீர்மானம்... சபாநாயகர் தலை தப்புமா?
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் ஜுன் 10-ந் தேதி தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் மீது திமுக தரப்பு கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதும் இந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் 2019- 20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவைப் பொதுத் தேர்தல் காரணமாக பிப்-14-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக மீண்டும் ஜுன் 10-ந் தேதி கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
22 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று 123 எம்எல்ஏக்களுடன் தெம்பாக ஆளும் அதிமுக அரசு இந்தத் தொடரில் பங்கேற்கிறது. அதே வேளையில் திமுகவும் 13 எம்எல்ஏக்களை கூடுதலாகப் பெற்று 101 பேர் பலத்துடன் அவையில் எதிர்க்கட்சி வரிசையில் ஜம்மென்று அமர்கிறது .இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களுடன், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தான், ஆளும் அதிமுகவின் உண்மையான பலம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சட்டசபையில் அதிமுகவின் பலம் சபாநாயகரையும் சேர்த்து123 என்றாலும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச் செல்வன் ஆகியோரின் உண்மையான நிலைப்பாடு ஊசலாட்டத்தில் உள்ளது.மேலும் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் தனியரசு தவிர்த்து தமிமுன் அன்சாரியும், நடிகர் கருணாசும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.
இந்த 5 பேரும் எடப்பாடிக்கு எதிராக திரும்பும் பட்சத்தில், 118 என்ற எண்ணிக்கையில் அதிமுக இருக்கும். இதில் ஓரிருவர் மாறி வாக்களித்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று ஆட்சிக்கு ஆபத்தாகி விடும். இங்கு தான் திமுகவும், டிடிவி தினகரனும் தங்கள் ஆடு, புலி ஆட்டத்தை காட்டப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி அரசு கவிழும் என்று தொடர்ந்து கூறி வரும் டிடிவி தினகரன், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். ஆனாலும் அதிமுகவில் தன்னுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேவையான நேரத்தில் வெளிப்படுவார்கள் என்று தேர்தல் தோல்விக்குப் பிறகும் கூறி வருகிறார். அதே போன்று திமுக தரப்பிலும் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி அரசை கவிழ்க்கும் கடைசி ஆயுதமாக தினகரன், தனது ஸ்லீப்பர் செல்களைப் பயன்படுத்தி வெற்றி பெறுவாரா? திமுகவும், அதிமுக எம்எல்ஏக்களை இழுப்பதில் வெற்றி காணுமா? என்பதெல்லாம் இந்தக் கூட்டத்தொடரில் தெரிந்துவிடும். இதையெல்லாம் முறியடிக்க எடப்பாடி தரப்பும் என்னென்ன அதிரடி யுக்திகளை கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.