பா.ஜ.க. அடுத்த டார்கெட் 333 தாங்க முடியலேப்பா
பிரதமராக மோடி இன்னும் பதவியேற்கவே இல்லை. அதற்குள், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் டார்கெட் 333 தொகுதிகள் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வரும் 30ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஆந்திரா, திரிபுா மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு மேலிடப் பொறுப்பாளராக உள்ள சுனில் தியோதர், டெல்லியில் வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், ‘‘கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 282 தொகுதிகளில் வென்றது.
இந்த தேர்தலில் 303 தொகுதிகளில் வென்றுள்ளது. அடுத்து வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் டார்கெட் 333 தொகுதிகள். மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை கடலோர மாநிலங்கள்(ஒடிசா, ஆந்திரா) அத்தனையும் பிடிப்போம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில், எங்கள் கட்சியை இந்தி கட்சி என்று ஒதுக்கி விட்டார்கள். இதை மாற்றி, நாடு முழுவதற்குமான ஒரே தேசியக் கட்சி என்று நிரூபிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.
இரண்டாவது முறை வெற்றியை கொடுத்துள்ள மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லாமல் இப்போதே அடுத்த தேர்தலைப் பற்றி இவர் பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல. கட்சி வெற்றி பெற்று பதவியேற்பு விழா கூட நடக்கவில்லை. அதற்குள் பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் இவரைப் போல் எக்குத்தப்பாக பேசத் துவங்கி விட்டார்கள். மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர், தங்களுடன் திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் 100 பேர் வரை தொடர்பில் உள்ளதாகவும், மம்தா ஆட்சியை கவிழ்க்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்களும், அங்கு குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்படும் என்று பேசுகிறார்கள். இதே போல்தான், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களிலும் பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள்.
நல்லவேளை, நம்மூரில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால்தானோ, என்னவோ, தேர்தலுக்கு முன்பு நீதிமன்றங்களை கூட அவமதித்து பேசிய தலைவர்கள் யாரும் சில நாட்களாக வாய் திறக்கவில்லை.