காவிரியில் 9.19 டிஎம்சி நீரை உடனே திறக்க வேண்டும் - கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு

காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இந்த ஆண்டிற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழக, கேரள கர்நாடக அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, மே மாதம் காவிரியில் திறக்க வேண்டிய 2 டிஎம்சி நீரை இம்மாதம் இறுதிக்குள் கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் குறுவை சாகுபடிக்காக கர்நாடகம் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் நீரை திறந்து விடுவது இல்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.இந்தக் கூட்டம் நடைபெறும் போது, நாகை தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.செல்வராஜ் வருகை தந்தார். காவிரி யில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் முடிவில் காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. தமிழகத்திற்கான ஜுன் மாத பங்கீடான 9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் என்று உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

More News >>