மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்டம் ஆரம்பம். திரிணாமுல் எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் இழுப்பு
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தனது ஆட்டத்தை துவக்கி விட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் 56 கவுன்சிலர்கள் பா.ஜ.க.வுக்கு தாவியுள்ளனர்.
மேற்குவங்கத்தில்தான் பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் கடுமையாக பிரச்சாரம் செய்தனர். ஆனாலும், அவர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி பல தடைகளை ஏற்படுத்தினார். அப்போது மோடி பேசுகையில், ‘‘திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் நூறு பேர் வரை எங்களிடம் தொடர்பில் உள்ளனர். மம்தா ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்’’ என்று எச்சரித்தார்.
அதே போல், தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க. தனது ஆட்டத்தை துவக்கி விட்டது. திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பிஜ்பூர் தொகுதி எம்.எல்.ஏ. சுப்ரான்ஷூ ராய், பிஷ்னுப்பூர் எம்.எல்.ஏ. துஷாகந்தி மற்றும் 3 உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 56 கவுன்சிலர்கள் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். அதே போல், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. தேவேந்திரநாத் ராயும் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
சுப்ரான்ஷூ ராய், ஏற்கனவே மம்தாவுடன் சண்டை போட்டு கொண்டு பா.ஜ.க.வுக்கு மாறிய முகுல்ராயின் மகன். நடந்து முடிந்த தேர்தலில் முகுல்ராய், பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றினார். கடந்த 2014 தேர்தலில் 2 எம்.பி.க்களை மட்டும் பெற்ற பா.ஜ.க. இந்த முறை 18 எம்.பி.க்களை வென்றுள்ளது. தனியொரு ஆளாக திரிணாமுல் கட்சியை களையெடுத்தவர் என்று தனது தந்தையை சுப்ரான்ஷூ பாராட்டினார். இதனால், கட்சியில் இருந்து அவரை மம்தா பானர்ஜி நீக்கினார். இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வுக்கு தாவியுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசியச் செயலாளர் கைலாஷ் விஜவர்கியா கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடந்தது. அதே போல், ஏழு கட்டமாக திரிணாமுல் கட்சியினரை பா.ஜ.க.வில் சேர்ப்போம். இது முதல் கட்டம்தான்’’ என்று கிண்டலாக கூறினார்.