முதல்ல தொகுதியை கவனிங்க.... ரூ.10 கோடிக்கு என்ன அவசரம்..? உச்சநீதிமன்றத்தில் மூக்குடைபட்ட கார்த்தி சிதம்பரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தான் வெளிநாடு செல்வதற்காக பிணைத் தொகையாக செலுத்திய ரூ.10 கோடியைத் தரக் கோரி தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் . அத்துடன், முதலில் உங்களை தேர்வு செய்த தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுரை கூறியது பெரும் பரபரப்பாகி விட்டது.

ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், விசாரணைக்காக நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அவர் வெளிநாடு செல்லவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது அமலாக்கத்துறை .இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். தேர்தல் முடிவடைந்த சில நாட்களில் அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். அதற்கு பிணைத் தொகையாக ரூ10 கோடியை டெபாசிட் செய்து விட்டு வெளிநாடு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன்படி, உச்சநீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.10 கோடியை வைப்புத்தொகையாக கடந்த மாதம் செலுத்திய பின்னர் தான் அமெரிக்கா பறந்தார்.

இந்த நிலையில், தற்போது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி எம்.பி.யாகி விட்ட கார்த்தி சிதம்பரம், வைப்புத்தொகையாக தான் செலுத்திய ரூ.10 கோடியைக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

ரூ 10 கோடியை தான் வங்கியில் கடனாக பெற்றதாகவும் இதற்காக வட்டியை செலுத்தி வருவதால், இந்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை இவ்வளவு அவசரமாக தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை என்று தெரிந்தும் எங்கள் நேரத்தை வீணாக்குவதா? என்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இப்பொழுதுதான் எம்.பி.யாகி உள்ளீர்கள்... முதலில் உங்களை தேர்வு செய்த தொகுதியில் கவனம் செலுத்தப் பாருங்கள் என்றும் கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து நீதிபதிகள் அறிவுரை கூறியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

More News >>