இடைத்தேர்தல் வெற்றி ... 9 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் சபாநாயகர் முன் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன் மூலம்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த 22 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமோ அல்லது எடப்பாடி அரசு கவிழும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியதால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
22-ல் 9 தொகுகிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நெருக்கடியான சூழலில் அதிமுக தேர்தலை சந்தித்தது. இறுதியில் மக்களவைத் தொகுதிகளில் படுதோல்வியைச் சந்தித்தாலும், சட்டப்பேரவை தொகுதிகளில் 9 இடங்களில் வெற்றி பெற்று கண்டம் தப்பிப் பிழைத்தது அதிமுக அரசு .இதில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்று பேரவையில் தனது பலத்தை 101 என அதிகரித்துள்ளது.
சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், சூலூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேருக்கும் சபாநாயகர் தனபால் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களும் நேற்றே பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.