மோடி பதவியேற்பு விழாவிற்கு மே.வங்கத்தில் 50 பேருக்கு அழைப்பு
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தூக்கத்தை தொலைத்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றுமில்லாமல் செய்திருந்தார் மம்தா. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பா.ஜ.க. முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போது, மம்தா பானர்ஜியை எரிச்சலூட்டும் வகையில் பா.ஜ.க. அதிரடி பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
மேலும், பஞ்சாயத்து தேர்தலில் துவங்கி, நாடாளுமன்றத் தேர்தல் வரை எல்லாவற்றிலும் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. வன்முறை, கலவரங்களில் இரு கட்சித் தொண்டர்கள் பலரும் உயிரிழந்தனர். தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை மம்தா கடுமையாக விமர்சித்தார். அப்போதே கோபப்பட்ட மோடி, திரிணாமுல் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 100 பேர் கட்சித் தாவத் தயாராக இருப்பதாக கூறினார்.
இந்நிலையில், மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும், மம்தா அரசுக்கு பல வழிகளில் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் மம்தாவுக்கு உதவியாக இருந்த முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதுடன் அவரை கைது செய்ய மும்முரமாக களமிறங்கியுள்ளது. அடுத்து, திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 56 கவுன்சிலர்களை பா.ஜ.க. தன் பக்கம் இழுத்தது. அத்துடன், இது முதல் கட்டம்தான், அடுத்தடுத்து திரிணாமுல் கட்சியினர் பலரும் பா.ஜ.க.வுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் கைலாஷ் எச்சரிக்கை விடுத்தார். இதுவும் மம்தாவுக்கு கோபத்தை கிளறி விட்டிருக்கிறது.
அடுத்ததாக, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு மேற்கு வங்கத்தில் இருந்து 50 பேரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருக்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா? பஞ்சாயத்து தேர்தலில் பல சமயங்களில் நடந்த மோதல்களில் திரிணாமுல் கட்சியினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டவர்களின் குடும்பத்தினர்தான். இவர்களை பா.ஜ.க. நிர்வாகிகளே அழைத்து சென்று டெல்லியில் ஓட்டலில் தங்க வைத்து பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் செய்கிறார்கள்.
இது குறித்து பா.ஜ.க. துணை தலைவர் ஜெய் பிரகாஷ் மஜூம்தார் கூறுகையில், ‘‘திரிணாமுல் கட்சியினரால் கலவரங்களின் போது கொல்லப்பட்ட பா.ஜ.க. தொண்டர்களின் குடும்பங்களில் இருந்து 50 பேரை பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளோம். மேலிடத் தலைவர்களுடைய உத்தரவின்பேரில் இதை செய்கிறோம். இந்த 50 பேருக்கும் டெல்லியில் அனைத்து வசதிகளையும் கட்சியே செய்து கொடுக்கும்’’ என்றார்.
அந்த 50 பேரில் யாதவ் சாகிஸ் என்பவர் கூறுகையில், ‘‘ஆர்ஷா பகுதியில் வசிக்கும் எனது மகன் சிசுபால் சாகிஸ், திரிணாமுல் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இப்போது என்னை பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருப்பது மகிழ்ச்சி’’ என்றார். மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து பா.ஜ.க. மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் மம்தா பானர்ஜியின் தூக்கத்தை கெடுத்து விட்டது நிஜம்.