ராஜ்யசபா எம்.பி.பதவி கனிமொழி, அமித் ஷா,ரவி சங்கர் பிரசாத் ராஜினாமா
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திமுகவைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் தங்கள் ராஜ்ய சபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ராஜ்யசபா எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என பலரும் போட்டியிட்டனர். எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஏதேனும் ஒரு பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது மரபாகும்.
அந்த வகையில் ராஜ்யசபா எம்.பிக்களான அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலும், ரவிசங்கர் பிரசாத் பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியிலும், கனிமொழி தூத்துக்குடியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவைக்கு செல்கின்றனர். இதனால் இந்த 3 பேரும் தங்கள் ராஜ்யசபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ராஜ்யசபா செயலகம் அறிவித்துள்ளது.
இதே போல் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இதுவரை, ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர் தான். குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்மிருதி இரானியும் அப்பதவியை ஓரிரு நாளில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆகி விட்ட வசந்தகுமார், தனது நாங்குனேரி எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.