ஒரு திட்டத்திற்கு அனுமதி தர 2 நடிகைகள் கேட்ட அமைச்சர்? சுவாமி போட்ட குண்டு...
‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்...’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குண்டு போட்டிருக்கிறார். யார் அந்த அமைச்சர்?
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை பகைத்து கொள்ளும் அரசியல்வாதிகள் அதோ கதிதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர கவர்னர் சென்னாரெட்டியிடம் முதன் முதலில் அனுமதி வாங்கியவர். ஜெயலலிதா மட்டுமல்ல, பலரை சிறைக்கு அனுப்பியவர்.
கடந்த சில ஆண்டுகளாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்து வழக்கில் சோனியா, ராகுலுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதே போல், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தையும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் போட்டு தாக்கி வருகிறார். தமிழக அரசியலை பொறுத்தவரை சசிகலா, தினகரன் ஆகியோருக்கு ஆதரவான கருத்துக்களை சுவாமி கூறி வந்துள்ளார். ஆனாலும், மற்றவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல் சுவாமிக்கு அமைச்சர்கள் ஜெயக்குமாரோ, ராஜேந்திர பாலாஜியோ பதில் சொல்லுவதே இல்லை. அதன் காரணம் எல்லோருக்கும் புரிந்ததுதான்.
இந்நிலையில், சுவாமி இன்று தனது ட்விடட்டர் பக்கத்தில் போட்டுள்ள செய்தியில், ‘‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை ஒரு அமைச்சர் கேட்டால், அவர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர் ஆகிறாரா என்று நான் சட்டத்தை படித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். ஏதேனும் ஆலோசனை உண்டா? விடை என்னவென்றால், தற்போது நடைபெற்று வரும் ஊழல் வழக்கில் போட வேண்டிய மனுதான்...’’ என்று குறிப்பி்ட்டிருக்கிறார்.
சுவாமி யாரைச் சொல்கிறாரோ என்ற தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் கேட்ட போது, ‘‘சுவாமி சொல்வது நிச்சயமாக தமிழக அமைச்சராக இருக்க முடியாது. அமைச்சர் கேட்டது பாலிவுட் நடிகைகள் என்று சொல்வதால், அது வேறு மாநில அமைச்சர் அல்லது மத்திய அமைச்சராக இருக்கலாம், அல்லது முன்னாள் அமைச்சராக கூட இருக்கலாம்’’ என்றார்.