ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆகிறார்?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். மே30 இரவு 7 மணியளவில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது.
அமைச்சரவையில் அருண் ஜெட்லிக்கு இடம் இல்லை என்பதும், அமித்ஷாவுக்கு வாய்ப்பு தரப்படும் என்பதும் உறுதியாக தெரிய வந்துள்ளது. மற்ற அமைச்சர்கள் யார் என்பது குறி்த்து பல்வேறு யூகங்களும் வெளியாகியுள்ளன. அதே சமயம், மத்திய அமைச்சரவையில் சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நிச்சயம் இடம் உண்டு என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.வில் ஒரேயொரு எம்.பி.யாக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே, அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு என்றால் அவர்தான் அமைச்சராக முடியும். இதை தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உறுதிபடுத்தியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விரைவில் நடைபெற உள்ள நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும். மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறும் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
மேலும், தேர்தல் முடிவுக்கு முன்பே ரவீந்திரநாத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டு வைத்தார்களோ, அதே போல் மக்களுக்கு நன்றியறிவிப்பு போஸ்டர்களில் மத்திய அமைச்சர் என்றே போட்டு தேனி தொகுதியில் ஒட்டியிருக்கிறார்கள். எனவே, அமைச்சர் பதவி நூறு சதவீதம் நிச்சயமாகி இருக்கும் என தெரிகிறது.
மேலும், இரவு 7 மணிக்கு பதவியேற்கவுள்ள பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் இடம்பெற உள்ளவர்களை மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த் பட்டியலில் ஓ.பி.ரவீந்திரநாத் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே காவிரியில் தண்ணீர், கிருஷ்ணா-கோதாவரி இணைப்பு என்று தமிழகத்தின் மீது திடீர் கரிசனம் காட்டத் தொடங்கியுள்ள பா.ஜ.க. மேலிடம், ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.