என்னை 36 துண்டுகளாக வெட்டி போட்டாலும் பா.ஜ.க.வில் சேர மாட்டேன்...

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், ‘‘என்னை 36 துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் நான் பா.ஜ.க.வில் சேரவே மாட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. மோடியின் சொந்த மாநிலமான இங்கு மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. இம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா தற்போது காந்திநகர் தொகுதியில் வென்றுள்ளார். அதே போல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உ.பி. மாநிலம் அமேதியில் வென்றுள்ளார். இதனால், குஜராத்தில் 2 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகின்றன.

தற்போது ஆளும் பா.ஜ.க.வில் 103 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசில் 71 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனால், காங்கிரஸ் ஒரு ராஜ்யசபா இடத்தை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதை தடுத்து 2 இடங்களையும் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. ஜம்காம்பலியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்ரம் மாடம், தியோதர் தொகுதியில் சிவபாய் புரியா ஆகியோர் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் பா.ஜ.க.வுக்கு மாறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், விக்ரம் மாடம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் காங்கிரசை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன். என்னை 36 துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் பா.ஜ.க.வில் சேரவே மாட்டேன். நான் கட்சி மாறப் போவதாக சொல்லுபவர்கள் பைத்தியக்காரர்கள். நான் கடந்த 3 நாட்களாக எனது தொகுதியில் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

அதே போல், சிவபாய் புரியாவும் தான் பா.ஜ.க.வில் சேரப் போவதில்லை என்று மறுத்துள்ளார்.

More News >>