உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்... 46 நாட்களுக்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
இந்தியா உட்பட 10 நாடுகள் பங்கேற்கும் 12 - வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இங்கிலாந்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தெ.ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
12-வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. இன்று தொடங்கி ஜூலை 14-ந் தேதி வரை 46 நாட்கள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
முதலில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ரவுண்டு ராபின் முறையில் மோது கின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும்.
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டு பிளசிஸ் தலைமையிலான தெ.ஆப்பிரிக்க அணியும் மோதுகின்றன.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5-ந் தேதி நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.
தொடர்ந்து 46 நாட்களுக்கு உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா நேற்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே உள்ள லண்டன் மால் பகுதியில் நடைபெற்றது.கடந்த 2015-ல் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் , இந்த சீசனுக்கான கோப்பையை மேடைக்கு கொண்டு வந்து அறிமுகம் செய்தார். பின்னர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணியின் கேப்டன்களுக்கு இங்கிலாந்து அரண்மனையில் விருந்து அளிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியின் கேப்டனுக்கும் ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி ஆகியோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.