குழப்பம் தீரலை... மேலும் குழப்ப வேண்டாம்... டி.வி.விவாதங்களில் காங்கிரசாருக்கு வாய்ப்பூட்டு

தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ள காங்கிரசில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் டி.வி. விவாதங்களில் பங்கேற்று, ஆளாளுக்கு ஒரு கருத்தைக் கூறி மேலும் குழப்ப வேண்டாம் என்று காங்கிரசாருக்கு ஒரு மாதம் தடை விதித்துள்ளது அக்கட்சி மேலிடம் .

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் தான் சந்தித்த முதல் பொதுத் தேர்தலில் கிடைத்த பெரும் தோல்வி ராகுல் காந்தியை நிலை குலையச் செய்து விட்டது. நாடு முழுவதும் தன்னந்தனி ஆளாக சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்தும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட செல்வாக்கு பெற முடியாமல் துடைத்தெறியப்பட்டது ராகுலுக்கு பேரதிர்ச்சியாகிவிட்டது.

இதனால் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று தலைவர் பதவியை துறக்க முடிவு செய்து விட்டார் ராகுல் காந்தி. தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பட்டியலிட்ட ராகுல், மூத்த தலைவர்கள் பலரின் ஒத்துழைப்பு இல்லாததையும் சுட்டிக்காட்டியது காங்கிரஸ் கட்சியில் நிலவும் குழப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் நடந்த விவாதங்கள் எனக் கூறி ஊடகங்களில் தாறுமாறாக பல்வேறு யூகமான செய்திகள் வெளியாகி, காங்கிரஸ் கட்சியின் இமேஜ், மேலும் டேமேஜ் ஆகி வருகிறது. மேலும் தேசிய செய்திச் சானல்களிலும் காங்கிரஸ் பற்றிய விவாதங்கள் சூடாகியுள்ளது. இந்த விவாதங்களில் பங்கேற்கும் காங்கிரஸ் புள்ளிகளும் பல்வேறு கருத்துக்களை கூறி மேலும் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்தக் குழப்பங்களுக்கு முடிவு கட்ட, டிவி விவாதங்களில் காங்கிரசார் பங்கேற்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, டிவிட்டரில் பதிவிட்ட செய்தியில், ஒரு மாத காலத்திற்கு கட்சியினர் யாரும் டிவி விவாதங்களும் பங்கேற்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. இதனால் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள், விவாதங்களில் காங்கிரசாரை பங்கேற்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

More News >>