பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி... அதிமுகவில் வைத்தியலிங்கத்துக்கு யோகம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தான் தர முடியும் என பாஜக தரப்பு கறாராக கூறி விட்டதாம். இதனால் அதிமுகவில் வைத்தியலிங்கம் அமைச்சர் யோகம் அடிக்கும் என்று கூறப்படுகிறது.

இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்கவுள்ளது. 40 காபினட் அமைச்சர்களும், அந்த எண்ணிக்கைக்கு சமமாக இணை, துணை அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த முறை போல் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி தான் என்று கறார் காட்டி விட்டார்களாம்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தங்கள் கட்சியின் சார்பில் அரவிந்த் சாவந்த் பெயரை உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்திருப்பதாக டிவீட் செய்துள்ளார். இதே போன்றே ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சிரோன்மணி அகாலி தளம், அதிமுக ஆகிய கட்சிகளுக்கும் ஒரு அமைச்சர் பதவி மட்டுமே கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் அதிமுக தரப்பில் அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் கடந்த சில நாட்களாகவே பெரும் குடுமிப் பிடிச் சண்டை நடந்து வருகிறது. தேர்தலில் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்த தனது மகனுக்கு எப்படியும் அமைச்சர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் ஓபிஎஸ் முனைப்பாக உள்ளார். ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்போ ஓபிஎஸ்சுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைப்பதை ரசிக்கவில்லையாம். கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகவும் உள்ள வைத்தியலிங்கத்தை எடப்பாடி முன்னிறுத்தி வருகிறாராம். 2 அமைச்சர் பதவி கிடைத்தால் ஓபிஎஸ் மகனுக்கு இணை அல்லது துணை அமைச்சர் என்று கடைசியில் முடிவு செய்யப்பட்டிருந்ததாம்.

ஆனால் இப்போது ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் என்ற பாஜகவின் முடிவால் வைத்தியலிங்கம் தான் அமைச்சராவார் என்று அதிமுக தரப்பில் அடித்துக் கூற, டெல்லி பாஜக தலைவர்களிடம் கடைசிக்கட்ட முயற்சிகளில் ஓபிஎஸ் தரப்பில் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே புதிய அமைச்சரவையில் இடம் பெறப் போவது யார்? யார்? என்ற பட்டியலை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் நேற்று மாலை இறுதி செய்து விட்டனராம். ஆனால் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்? என்பதில் இன்னும் ரகசியம் காக்கப்படுவதால், பாஜகவில் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியினர் பலரும் இன்னும் அமைச்சர் பதவிக் கனவில் மிதந்து கொண்டுள்ளனர். இதனால் எந்த நேரமும் அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் பலர் காத்துக் கொண்டுள்ளனர் என்பது தான் தற்போதைய நிலவரம்.

More News >>