பிரதமர் பதவியேற்பு அதிமுக பட்டாளம் டெல்லிக்கு படையெடுப்பு... மு.க.ஸ்டாலின் ஆந்திரா பறந்தார்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.

தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகும் மோடியின் பதவியேற்பு விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். சுமார் 8 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளு னர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அத்துடன் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு, தொழில் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடப்பட்டு பங்கேற்கின்றனர்.

பிரதமர் பதவியேற்பில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து பெரும் பட்டாளமே படையெடுத்துள்ளது.அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஜெயக்குமார் என அமைச்சரவையில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

பாஜக தலைவர்களில் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா என பலரும் படையெடுத்துள்ளனர்.கூட்டணியில் இடம்பெற்ற பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி என பலரும் சென்றுள்ளனர். சிறப்பு அழைப்பின் பேரில் நடிகர் ரஜினியும் டெல்லிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு முறையான அழைப்பு விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று பிற்பகல் நடைபெறும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவருடைய மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் தனி விமானம் மூலம் விஜயவாடா சென்றுள்ளனர்.

More News >>