மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் திமுக எம்.பி.க்கள்
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் புறக்கணிக்கின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அ.தி.முக. கூட்டணிக்கு ஒரு தொகுதியாக தேனியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. ஆனால், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி, புதுச்சேரியையும் சேர்த்து 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் 23 உறுப்பினர்களுடன் 3வது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது இந்த அடிப்படையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அழைப்பு வரவில்லை.
அதேசமயம், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற குட்டிக் கட்சிகளின் தலைவர்களுக்கு கூட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே போல், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, அது தவறான செய்தி என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் ட்விட் போட்டார். அதேசமயம், ரஜினி தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படாதது தி.மு.க.வினருக்கு ஆச்சரியத்தை அளித்தது. இதையடுத்து, தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.