மோடி பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் டெல்லி பயணம்
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லிக்கு சென்றுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். இன்று(மே30) இரவு 7 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தலா ஒரு அமைச்சர் பதவியாவது கொடுக்க மோடி தீர்மானித்திருக்கிறார். அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கும் ஒரு இணை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்தலிங்கம் எம்.பி, நேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து பேசினார். அதனால், ராஜ்யசபா எம்.பி.யான அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி கிடைக்கலாம் என பேசப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லிக்கு சென்றுள்ளனர். மேலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் டெல்லிக்கு சென்றுள்ளனர். அதிமுக எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.