சரத்பவாருடன் ராகுல் திடீர் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொள்ளாத ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பாராத அளவுக்கு பா.ஜ.க. கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகள் சுக்குநூறாக நொறுங்கிப் போயின. கடந்த முறை வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட இழந்த காங்கிரஸ், இம்முறையும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அதை கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் ஏற்கவில்லை. அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று மற்ற கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகி்ன்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தியை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார். அதன்பின், குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ராகுல் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்’’ என்றார். இதன்பின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்கள் குறித்து விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், அகமது படேல் ஆகியோரும் ராகுலை சந்தித்து பேசினர்.