தமிழகத்துக்கு நோ ஆனாலும் 2 தமிழர்கள்
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த அமைச்சர் பதவியும் தரப்படவில்லை. ஆனாலும், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 கேபினட் அமைச்சர்களும் தமிழர்கள்தான்.
பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. மட்டும் ஒரேயொரு தொகுதியில் வெற்றி பெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே தேனியில் வென்றார். பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளில் போட்டியிட்ட ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், பா.ஜ.க. அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி தரப்போகிறது என்று செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, அமைச்சராக ரவீந்திரநாத் பதவியேற்பார் என்று பேசப்பட்டது. மேலும், அவரது நன்றி அறிவிப்பு போஸ்டர்களில் மத்திய அமைச்சர் என்றே குறிப்பிட்டிருந்தனர். அதன்பின், அ.தி.மு.க.வில் மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க ராஜ்யசபா உறுப்பினர்களிடையே போட்டி ஏற்பட்டது. சீனியர் என்ற அடிப்படையில் வைத்திலிங்கம் பெயர் அடிபட்டது.
ஆனால், மோடி அமைச்சரவையில் அ.தி.மு.க.விற்கு இடம் தரப்படவில்லை. அதனால், தமிழகத்திற்கென அமைச்சரவையில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. ஆயினும் கூட, பதவியேற்ற 24 கேபினட் அமைச்சர்களில் நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழர்கள்தான். அதே சமயம், இருவருமே டெல்லியிலேயே பல ஆண்டுகளாக வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.