மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் - இன்று மாலை கூடுகிறது
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. அப்போது, நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரை கூட்டு வதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
17-வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில், பிரதமர் மோடி உள்பட 58 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. 25 கேபினட் அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர்.
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் 17-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரை நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டத் தொடர் அநேகமாக வரும் ஜூன் 6-ந்தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு மற்றும் புதிய சபாநாயகர் தேர்வு ஆகியவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.