மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே போனது? முன்னாள் நீதிபதி கேள்வி
மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே போனது? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டாம் முறையாக பதவியேற்ற நிலையில் அவருடன் 57 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்
தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தன் மீது பலரும் பொறாமை பிடித்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார் மோடி.
ஆனால் அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட உயர் சாதியினரே அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மோடியின் அமைச்சரவையில் சமூக நீதி எப்படி இருக்கிறது. அமைச்சர்களின் விவரங்களை சமுதாய ரீதியாக குறிப்பிடுகிறேன்.
பிரதமர் மற்றும் 57 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில், உயர் சாதியினர் - 32, பிற்பட்ட வகுப்பினர் -13, பட்டியல் இனத்தவர் - 6, பழங்குடியினர் - 4 சீக்கியர் - 2, இஸ்லாமியர் - 1
ஒருவருக்கு ஒரு வாக்கு என சம வாய்ப்பு பேசும் அரசியல் தளத்தில்... மக்கள் தொகையில் சுமார் 50 முதல் 60 சதவீதம் உள்ள பிற்பட்ட வகுப்பினருக்கு 13 அமைச்சர்கள், சுமார் 10-15 சதவீதம் உள்ள உயர் சாதியினருக்கு 32 அமைச்சர்கள், இட ஒதுக்கீடு இருப்பதால் எம்.பி.க்கள் ஆக முடிந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10 அமைச்சர்கள் (இட ஒதுக்கீடு இல்லை எனில்?), சுமார் 14 சதவீதம் உள்ள இஸ்லாமியருக்கு 1 அமைச்சர் என்பதே நிதர்சன உண்மை. அனைவருக்கும் சம வாய்ப்பு எப்போது?”
இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்.