ஜூன் 17-ந்தேதி மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடக்கம்... ஜூலை 5-ல் பட்ஜெட் தாக்கல்

17-வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 352 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தன. இதனால் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார். அப்போது 58 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. மோடி மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று பொறுப்பேற்றனர்.

இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவையின் முதல் கூட்டத் தொடரை நடத்துவது, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ந் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிகிறது. மேலும் ஜூலை 5-ந் தேதி 2019-20-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News >>