விடுதி மாணவர்களை துன்புறுத்தி பாலியல் தொல்லை - ஊழியர்கள் கைது
விடுதி மாணவர்களை துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழித்துறையில் ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு குழித்துறை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் 25 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். சம்பவத்தன்று இந்த விடுதியில் தங்கி படித்துவந்த 12 வயது பள்ளி மாணவர், அவர் படிக்கும் அரசு பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அவரது உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது அரசு ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில், தன்னை அங்குள்ள ஊழியர்கள் 2 பேர் பாலியல் தொந்தரவிற்கு ஆளாக்கி சித்ரவதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆசிரியர்கள் மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் ஆதிதிராவிடர் விடுதிக்குச் சென்று செவ்வாய்க்கிழமை இரவில் விசாரணை நடத்தினர். அப்போது மாணவனை இரு ஊழியர்கள் அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.
மேலும் இது தொடர்பாக விடுதியில் தங்கிய 19 மாணவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதாவிடம் புகார் அளித்தனர். அதில் 9 பேர் விடுதியில் சமையலராக உள்ள விஷ்வாம்பரன் என்பவர் குடித்து விட்டு தங்களை பாலியல் ரீதியாகவும், அடித்தும் சித்ரவதை செய்ததாக தெரிவித்தனர்.
மற்றொரு சமையலர் வில்சன் இதனை கண்டும் காணாமல் இதற்கு உடந்தையாக இருந்து தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதில் விஷ்வாம்பரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.