அது மத்திய அரசு ஓட்டு மிஷின் ... இது மாநில அரசு எந்திரம்... கர்நாடக உள்ளாட்சி தேர்தல் பற்றி காங்.கருத்து
கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அமோக வெற்றி பெற்று, பாஜக சரிவைச் சந்தித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையத்தின் ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரே மாதத்தில் மக்களின் மனசு மாறிவிட்டது பாருங்கள் என்று எதையோ குத்திக் காட்டி, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கர்நாட மாநிலத்தில் உள்ள 28மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 மற்றும் 23 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் மாநிலத்தில் ஆளும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. பாஜகவோ 25 தொகுதிகளைக் கைப்பற்றியது.நாடு முழுவதும் வாக்கு எந்திரங்களில் தில்லு முல்லு என்று புகார் எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் தில்லு முல்லு நடத்தி பாஜக வென்றுவிட்டது என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு தகுந்தாற்போல், மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் கடந்த மே 29-ந் தேதி கர்நாடகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 1221 இடங்களில் நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் 509, பாஜக 366, மதச்சார்பற்ற ஜனதா தளம் 174, சுயேச்சைகள் 172 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக, ஒரு மாத இடைவெளியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்தது பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.அதே வேளையில் மாநில அரசில் கூட்டணியாக இருக்கும் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இந்தத் தேர்தலில் தனித்தனியாக நின்று கணிசமான இடங்களை கைப்பற்றியதில் இரு கட்சிகளுக்குமே உற்சாகமாகியுள்ளது.
இந்த முடிவுகள் குறித்து காங்கிரசின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவிட்டதில், ஓட்டு எந்திரங்கள் பற்றிய சந்தேகத்தை நாசூக்காக வெளிப்படுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் நடந்த இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு அமோக வெற்றி கிட்டியுள்ளது.மக்களவைத் தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.ஒரு மாதத்தில் மக்களின் மனசு மாறி காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளது சந்தோஷமாக உள்ளது என்று, வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டை இடித்துக் காட்டுவது போல் சுட்டிக்காட்டியுள்ளார்.