தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி
தமிழகத்தில் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பள்ளி களில் எட்டாம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக சட்டமன்றத்தில், இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுதான் செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ள செங்கோட்டையன், எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவை எடுப்பார். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும். இருமொழிக் கொள்கையை தான் தொடர முடியும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார் எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.