குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் : எடியூரப்பா பேட்டி
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் வேலைகளில் இறங்க வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டிருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், முதலமைச்சர் பதவியை ம.ஜ.த. கட்சித் தலைவர் குமாரசாமிக்கு விட்டு கொடுத்தது. ம.ஜ.த. கட்சி வெறும் 37 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு சட்டமன்றத்தில் 3வது இடம்வகிக்கிறது. ஆரம்பம் முதல் கூட்டணிக்குள் சலசலப்பு காணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரசில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியமைக்க பா.ஜ.க. திட்டமிட்டது. அந்த கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இன்னும் 7 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதும். சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்து விடலாம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 25ல் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ், ம.ஜ.த, கூட்டணி வெறும் 3 தொகுதிகளில்தான் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரசில் மீண்டும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. ம.ஜ.த. கூட்டணியை முறிக்க சிலர் முயன்று வருகின்றனர்.
இந்த சூழலில், பா.ஜ.க. ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜரிகோலியை, பா.ஜ.க.வின் எம்.பி. உமேஷ் ஜாதவ் மற்றும் சி.பி.யோகீஸ்வர் ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து, விரைவில் குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்று விட்டு டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டி வருமாறு: குமாரசாமி ஆட்சியைக் கவிழ்க்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று எங்களுக்கு பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டிருக்கிறது. எனவே, பா.ஜ.க. சிறிது காலத்திற்கு அமைதியாக கர்நாடக அரசியலை கவனித்து வரும். காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணியில் சண்டை ஏற்பட்டு, அவர்களாக பிரிவார்கள். அது வரை காத்திருப்போம்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.