இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ட்விட்டரில் டிரெண்ட் ஆனது

இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

மத்திய அரசின் கல்வி வரைவு கொள்கையில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிக்கிறது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தி திணிப்பு அம்சங்கள் உள்ளதாம்.இந்தி பேசும் மாநிலங்களில் 3வது மொழியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது. இதை மத்திய அரசு பள்ளிகளில் அமல்படுத்தினால் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் மறைமுகமாக இந்தி திணிக்கப்படும்.

இதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த மொழி திணிக்கப்பட்டாலும் அதனை திமுக எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறியுள்ள கமல்ஹாசன், தமிழ் மொழியை விட்டுவிட்டு இனி வேறு மொழியை தமிழர்கள் ஏற்பது கடினம் என்றார். இதேபோல் மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இந்தி திணிப்பிறகு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உருவாக்கப்பட்டு, அது படுவேகமாக டிரெண்ட் ஆகியுள்ளது. அதே போல், #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டாகும் டிரெண்டாகி வருகிறது. இவ்விரு ஹேஷ்டேக்குகளும் தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இந்தி திணிப்பை தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற இந்தி பேசாத மாநிலங்களும் எதிர்ப்பதால், தமிழர்கள் மட்டுமின்றி மற்ற சில மாநிலத்தவர்களும் இந்த ஹேஸ்டேக்குகளை டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.

More News >>