தனிக்கட்சியா, மீண்டும் இணைப்பா... தினகரன் கட்சியினர் மனநிலை என்ன?
அ.ம.மு.க.வை அடுத்து எப்படி நடத்துவது? அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைக்க வேண்டுமா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் டி.டி.தினகரன்.
நாடாளுமன்றத் தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் ஒன்றில் கூட டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவில்லை. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்தும், தொடர்ந்து எப்படி கட்சியை நடத்துவது என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த வாரம், தஞ்சாவூரில் ரெங்கசாமி வீட்டுத் திருமணத்திற்கு வெற்றிவேல், தங்கத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் வராததால் அவர்கள் தினகரனிடம் இருந்து விலகிச் செல்வதாகவும், அ.தி.மு.க.வில் மீண்டும் சேரப் போகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், அ.ம.மு.க. ஆலோசனை கூட்டத்திற்கு அவர்கள் இருவரும் வந்திருந்தனர். பழனியப்பன், செந்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட
வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளும்கட்சியில் எந்தெந்த புள்ளிகள் எப்படியெல்லாம் இடையூறு செய்தார்கள் என்று கூட்டத்தில் பலரும் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து அ.ம.மு.க.வை எப்படி நடத்துவது, அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டுமா, தனியாக தொடர்ந்து கட்சி நடத்தும் போது ஆளும்கட்சி கொடுக்கும் தொல்லைகளை எப்படி சமாளிப்பது என்று பேசப்பட்டிருக்கிறது.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் தனிக்கட்சியாக தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கூட்டத்திற்கு பின்பு பத்திரிகையாளர்களிடம் தினகரன் பேசும் போது, ‘‘அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட பெரிய தோல்விகளை சந்தித்தது வரலாறு. நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவோம். தோற்று விட்டதாலேயே நாங்கள் அழிந்து போகப் போவதில்லை. தோற்றதற்காக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியுமா? அடுத்து வரவிருக்கும் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்தோம்’’ என்றார்.