உலகக் கோப்பை கிரிக்கெட் : இலங்கையை பந்தாடிய நியூசிலாந்து ... 10 விக். வித்தியாசத்தில் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 136 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கருணாரத்னே தலைமையிலான இலங்கை மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே முதல் ஓவரிலேயே 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் குசல் பெரேரா 29 ரன்னில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா , மேத்யூஸ், ஜீவன் மென்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
அணியை சரிவிலிருந்து மீட்க திசரா பெரேரா மற்றும் கருணாரத்னே ஜோடி சேர்ந்தனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த திசரா பெரேரா 27 ரன்னில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய இசுரு உதனா டக் அவுட் ஆனார். சுரங்கா லக்மல் 7 ரன்னிலும், மலிங்கா 1 ரன்னிலும் வெளியேற 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது.தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கருணாரத்னே பொறுப்புடன் விளையாடி ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியில் மாட் ஹென்றி மற்றும் பெர்குசன் 3 விக்கெட்களை சாய்த்தனர். மேலும் டிரென்ட் பவுல்ட், கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், சான்ட்னெர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்டில் மற்றும் காலின் மன்ரோ ஆகியோர் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி,16.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி (137 ரன்கள்) வெற்றி இலக்கை எட்டியது. இதனால் நியூசிலாந்து,10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்டில் 73 ரன்களுடனும், காலின் மன்ரோ 58 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.