யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது.... பின் வாங்கியது மத்திய அரசு

பள்ளிகளில் இந்தி மொழிப் பாடம் கட்டாயம் என்ற மத்திய அரசின் மும் மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் கல்வி வரைவு கொள்கையில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிக்கிறது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இந்தித் திணிப்பு அம்சங்கள் உள்ளன.இந்தி பேசும் மாநிலங்களில் 3-வது மொழியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை 3-வது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு கூறியுள்ளது. இதை மத்திய அரசு பள்ளிகளில் அமல்படுத்தினால் தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் மறைமுகமாக இந்தி திணிக்கப்படும்.

இதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த மொழி திணிக்கப்பட்டாலும் அதனை திமுக எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறியுள்ள கமல்ஹாசன், தமிழ் மொழியை விட்டுவிட்டு இனி வேறு மொழியை தமிழர்கள் ஏற்பது கடினம் என்றார். இதேபோல் மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இந்தி திணிப்பிறகு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுத் தரப்பிலும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என்றும், இது குறித்து சட்டப் பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

பள்ளிகளில் இந்தி மொழிக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தில் பல்டி அடித்துள்ளது.இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், யார் மீதும் எந்த மொழியும் கட்டாயமாக திணிக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் னண்ணம். தற்போது வெளியாகியுள்ளது வரைவு அறிக்கை மட்டும் தான். மக்களின் கருத்தை கேட்ட பின்பே மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் என்று விளக்கமளித்துள்ளார்.

More News >>