எதிர்க்கட்சித் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்குமா?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. ஆனாலும், காங்கிரசுக்கு அந்தப் பதவியை பா.ஜ.க. அரசு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை வரும் 17ம் தேதி கூடுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.வழக்கமாக, நாடாளுமன்றத்தி்ல் 2வது பெரிய கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும். இந்த பதவி, கேபினட் அமைச்சர் அந்தஸ்து படைத்தது. அதனால், அமைச்சருக்கு உரிய சலுகைகளும் கிடைக்கும். கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சியமைத்தது. அப்போது காங்கிரஸ் வெறும் 44 இடங்களைத்தான் வென்றிருந்தது. நாடாளுமன்ற மொத்த எண்ணிக்கையான 543ல் பத்து சதவீதம் என்ற கணக்கின்படி 55 உறுப்பினர்களை பெறும் கட்சிக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரப்படும் என்று கூறி, யாருக்குமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கடந்த 2014ல் பா.ஜ.க.வின் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறி விட்டார். அப்படிப் பார்த்தால், இம்முறையும் காங்கிரஸ் 52 இடங்களையே பிடித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பா.ஜ.க.வினர் தர மாட்டார்கள் என்று உணர்ந்த காங்கிரஸ், அந்தப் பதவியை கோரப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. இது குறித்து, மாநிலங்களவை முன்னாள் துணை தலைவர் பி.ஜே.குரியன் கூறுகையில், ‘‘ஆளும் கூட்டணி வெற்றி பெற்றதும் எப்படி கூட்டணி ஆட்சியை அமைக்கிறதோ, அது போல் எதிர்க்கட்சி கூட்டணியின் மொத்த பலத்தை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தரலாம். அதாவது, காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 92 உறுப்பினர்கள் உள்ளதால், அந்த பதவியைத் தரலாம். ஆனால், பா.ஜ.க. அப்படி தராது என்பதால், நாங்கள் அதை கோரப் போவதில்லை’’ என்றார்.மேலும், அவர் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற விதிகளின்படி பத்து சதவீத உறுப்பினர்களை பெறும் எதிர்க்கட்சிக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. கடந்த 1984ம் ஆண்டில் இந்திராகாந்தி மறைந்த போது, காங்கிரசுக்கு ஏற்பட்ட அனுதாப அலையால் 404 தொகுதிகளில் அபாரமாக வென்றது. அந்த சமயத்தில் ஆந்திராவில் மட்டுமே என்.டி.ராமாராவின் தெலுங்குதேசம் கட்சி 30 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் 2வது பெரிய கட்சியாக இருந்த அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதைய சபாநாயகர் பலராம் ஜாக்கர், எதிர்க்கட்சி அந்தஸ்து பெற குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்து விட்டார்’’ என்று தெரிவித்தார்.

More News >>