பெயில்.. அப்புறம் பாஸ்.. கடைசில பெயில்... தப்பு தப்பா திருத்திய தெலுங்கானா ஆசிரியர்கள்
தெலுங்கானா மாநிலத்தில் +2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதலில் ஆசிரியர்கள் காட்டிய அலட்சியம் மேலும் மேலும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளில் ஒரு மாணவியை பெயில் என்று கூறிவிட்டு, மறுமதிப்பீட்டில் பாஸ் மார்க் கொடுத்து விட்டு அப்புறம் தவறு என்று கூறி பெயிலாக்கிய கூத்தால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியோ, பெயில் என்று முடிவு வந்ததால் தற்கொலை செய்து, இப்போது உயிருடன் இல்லை என்பது தான் சோகத்திலும் சோகம்.
தெலங்கானாவில் இந்தாண்டு அம்மாநில கல்வித்துறையும், ஆசிரியர்களும் காட்டிய அலட்சியத்திற்கு அளவேயில்லை எனலாம். இன்டர்மீடியட் தேர்வு வினாத்தாள் திருத்தி மதிப்பீடு செய்ததில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டது. இதனால் கடந்த ஏப்ரல் 18 -ந்தேதி வெளியான தேர்வு முடிவுகளில் ஆயிரக்கணக்கானோரை பெயிலாக்கி விட்டனர்.
இதனால் நன்கு படித்தும் பெயிலாகிவிட்டோமே என மனமுடைந்த 26 மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ள விவகாரம் பெரிதாக வெடித்தது. உடனே நீதிமன்றம் தலையிட்டு பெயிலான மாணவர்கள் அனைவரின் வினாத்தாள்களையும் மீண்டும் மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. இதில் 1137 பேர் பாசாகி விட்டனர்.
இந்த மறு மதிப்பீட்டிலும், தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவி விவகாரத்தில் பெரும் குளறுபடி நடந்துள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்து மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த அனாமிகா அருதாலா என்ற மாணவி விவகாரத்தில் தான் இத்தனை குளறுபடி.முதலில் வந்த முடிவில் தெலுங்கு மொழிப் பாடத்தில் 20 மார்க் மட்டுமே எடுத்து பெயில் என வெளியானது. இதனால் அதிர்ச்சியில் மனமுடைந்த அனாமினா தற்கொலை செய்து கொண்டார். நன்கு படித்த தங்கள் பிள்ளையை பெயிலாக்கி விட்டதே தற்கொலைக்கு காரணம் என்று அனாமிகாவின் பெற்றோர் கொந்தளிந்தனர்.ஒரு மாதம் கழித்து வெளியான வினாத்தாள் மறு மதிப்பீட்டில் அனாமிகா 48 மார்க் எடுத்துள்ளார் எனவும் பாஸாகிவிட்டார் எனவும் கல்வித்துறை அறிவித்தது. ஆனால் சில நாட்கள் கருத்து, மார்க் பதிவேற்றம் செய்ததில் தவறு ஏற்பட்டுவிட்டது. அனாமிகாவுக்கு 21 மார்க் தான் கிடைத்துள்ளது. அவர் பெயில் தான் என்று மீண்டும் கல்வி இலாகா அறிவிக்க பெரும் சர்ச்சையாகிக் கிடக்கிறது.
ஏற்கனவே மகளை இழந்து தவிக்கும் அனாமிகாவின் பெற்றோர், தன் மகளின் விஷயத்தில் மட்டுமே இப்படி அலட்சியமா? அல்லது ஒட்டுமொத்தமாகவே தெலங்கானா அதிகாரிகள் இந்த லட்சணத்தில் தான் நடந்து கொள்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் மாணவர்களின் எதிர்காலமான படிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டி, 26 பேர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இன்று ஐதராபாத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தவறு செய்த அத்தனை பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தெலங்கானாவில் மீண்டும் வலுத்துள்ளது.