பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் செல்லும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லும் +2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகை அமலில் உள்ளது. நாளை பள்ளிகள் திறக்கப்படும் சூழலில், இலவசமாக பயணம் செய்வதற்கான பாஸ்களை வழங்க கால தாமதம் ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கும் போது, பேருந்தில் இலவசமாக பயணிக்க முடியுமா? முடியாதா? என்ற குழப்பம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதற்கு முதல் நாளே, போக்குவரத்துத் துறை அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீருடை அணிந்து பயணிக்கும் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழகபோக்குவரத்துத்துறை பொது மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

More News >>