உங்கள் மகன் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறானா? இப்படி சமாளிக்கலாம்!
நீண்ட கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ளன. புதிய பள்ளி அல்லது புதிய வகுப்பு, புதிய புத்தகங்கள், புதிய ஆசிரியர், புதிய சீருடை... எல்லாமே புதியவைதாம்!
பள்ளிக்கு சந்தோஷமாக செல்லும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளியே வேப்பங்காயாக கசக்கும் மாணவனின் பெற்றோர் நிலை என்ன?
காலையில் எழுந்தால் தலைவலி, வயிற்றுவலி என்று ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி உங்கள் மகன் அல்லது மகள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்க நினைக்கிறானா (ளா)? அப்படிப்பட்ட பையனின் பெற்றோருக்கு நாளே போராட்டமாக விடியும். நாள்பட இந்த பிரச்னை தீவிரமடையும். சிறுவர்கள் மட்டுமல்ல, பதின்ம வயதினர், ஏன் இளம்வாலிபர்களுக்குக்கூட இந்த பிரச்னை உள்ளது.பள்ளிக்குச் செல்ல ஏன் மறுக்கிறார்கள்?
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும்.
கவனம் செலுத்த முடியாத குறைபாடு: வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை கவனிக்க இயலாத குறைபாடு உள்ள பிள்ளைகள், வகுப்பினை தவிர்க்க நினைக்கிறார்கள். கவனம் செலுத்த இயலாத குறைபாடு (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) சிறுபிள்ளைகள் முதல் பதின்ம வயதினர் வரையுள்ளவர்களிடம்காணப்படுகிறது. பாடங்களை கவனிக்க இயலாததால், வகுப்பறையில் அம்மாணவனின் / மாணவியின் மொத்த செயல்பாடுமே பாதிப்புக்குள்ளாகிறது. ஆசிரியர்கள் கண்டிப்பார்கள்; தண்டனை தருவார்கள் என்ற பயத்தை இக்குறைபாடு தூண்டுவதால் இதனால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர் பள்ளிக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள்.
கனவினை திணிக்கும் பெற்றோர்: பல பெற்றோர் தங்கள் நிறைவேறாத கனவுகளை பிள்ளைகள்மேல் திணிக்கின்றனர். தங்கள் மகனோ, மகளோ அனைவரை விடவும் சிறந்து விளங்க வேண்டும் என்று வைராக்கியம் பாராட்டுகின்றனர். மாணவனின் இயல்புக்கு, திறனுக்கு எட்ட இயலாத இலக்குகளை தாங்களாகவே நிர்ணயித்து, அதை அடையும்படி துரத்திக்கொண்டே இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பெற்றோரின் பெருங்கனவு பிள்ளைகளுக்கு பயத்தை தோற்றுவிக்கிறது. விருப்பமில்லா பாடங்களை, புரியாமல் படித்து எப்படி உயர்மதிப்பெண்கள் வாங்குவது என்ற கலக்கம் வகுப்புகளை புறக்கணிக்கும்படி அவர்கள் தூண்டுகிறது.
உடன் மாணவரின் கேலி: உங்கள் மகனோ, மகளோ பள்ளிக்குச் செல்ல மறுத்தால் வகுப்பில், பள்ளியில் அவனை /அவளை உடன்படிப்பவர்கள் கிண்டல் செய்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்துப் பார்ப்பது நல்லது. விளையாட்டாக தொடங்கும் கேலி, கிண்டல் தொடர்வது பிள்ளைகளை மனதளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. கிண்டலை எதிர்கொள்ள தயங்கி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மறுக்கலாம்.
இனங்காணா மனச்சோர்வு: சில பிள்ளைகள் மனச்சோர்வு, மனஅழுத்தம் மற்றும் மனக்கலக்கத்தினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு மனதளவில் பிரச்னை என்பதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். இப்படிப்பட்ட பிள்ளைகள் யாருடனும் பழகுவதற்கு தயங்குவார்கள்; தனிமையில் இருப்பதையே விரும்புவர்.
அம்மா செல்லம்: பெற்றோருடன் அல்லது தாத்தா, பாட்டியுடன் சில பிள்ளைகள் ஒட்டிக்கொள்வார்கள். வீட்டை விட்டு வெளியில் உள்ள சூழ்நிலையில் அவர்களால் பொருந்த இளலாது. எப்போதும் அரவணைப்பை விரும்பும் குழந்தைகளும் பள்ளியை தவிர்க்க வாய்ப்புள்ளது.
அறிகுறிகள்: பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளுக்கு கீழ்க்காணும் பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது.
மன எரிச்சல், கோபம், யார் பேச்சையும் கேட்காத தன்மை, தலைசுற்றல், தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, காதுகளில் இரைச்சல் கேட்டல்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதை கண்டுகொள்ள முயற்சி செய்யுங்கள். பள்ளியில் யாரும் கேலி செய்கிறார்களா என்று கவனியுங்கள். அவர்கள் இயல்புக்கு ஒவ்வாத பெரிய இலக்குகளை திணிக்காதீர்கள். உங்கள் முயற்சிகள் பலனளிக்காவிட்டால் மருத்துவ உதவியை நாடுவது நன்று.