அ.தி.மு.க.வுக்கு இனி இல்லை? தமிழகத்திற்கு இவர்கள்தான்

அ.தி.மு.க.வுக்கு இனி மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தமிழகத்திற்கான ஒதுக்கீடாகவே இந்த 2 கேபினட் அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று பா.ஜ.க. மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

மத்தியில் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 57 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரவீந்திரகுமார் மட்டுமே வென்றுள்ளார். பா.ஜ.க. 303 இடங்களை பெற்று அறுதிப் பெரும்பான்மை வைத்திருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்கியது. அதனால், அ.தி.மு.க.வுக்கும் அந்த வாய்ப்பு தரப்படும் என்றும், ரவீந்திரகுமார் அமைச்சராகி விடுவார் என்றும் பரவலாக பேசப்பட்டது.

இதன்பிறகு, அதிமுக ராஜ்யசபா உறுப்பினரான வைத்திலிங்கம், அமைச்சராக பொறுப்பேற்பார் என்று அக்கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டது. கடைசியில் அ.தி.மு.க.வில் யாருமே அமைச்சராகவில்லை.

அ.தி.மு.க.வில் ரவீந்திரகுமாரை அமைச்சராக்க எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், வைத்திலிங்கத்தை அமைச்சராக்க பரிந்துரைத்ததாகவும், இந்த உட்கட்சி மோதல் காரணமாக யாருக்குமே அமைச்சர் பதவி தரப்பவில்லை என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், பா.ஜ.க. மொத்தத்திலேயே அ.தி.மு.க.வை கண்டுகொள்ளவில்லை என்பது தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி உறுதிபடுத்தியுள்ளது. ‘‘மோடி அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு நேற்று அழைப்பு வரவில்லை. இன்று வரலாம், அல்லது நாளை வரலாம். பா.ஜ.க.வுக்கே பெரும்பான்மை இருப்பதால் நாம் எதுவும் கேட்க முடியாது’’ என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார். எனவே, அ.தி.மு.க.வை பா.ஜ.க. கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் அமைச்சரவையில் இடம் தராமல் புறக்கணித்து விட்டார்கள் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், தமிழகத்திற்குத்தான் இந்த 2 கேபினட் அமைச்சர்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் பா.ஜ.க. மேலிடம் அடையாளம் காட்டியுள்ளது. அதாவது, மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கை 2 நாள் முன்பாக வெளியிடப்பட்டது.

அதில், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மீண்டும் இந்தி திணிப்பா என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிடக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. அது மட்டுமல்ல, இந்திதிணிப்புக்கு எதிராக ட்விட்டரில் ஒரு ஹேஸ்டேக் போடப்பட்டு, அதுவும் வைரலாக பரவியது.

இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடனடியாக விளக்கம் கொடுத்து விட்டார். ஆனால், அதற்கு பிறகு நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ட்விட்டரில் விளக்கம் கொடுத்தார்கள். அவர்களுக்கு தொடர்பு இல்லாத துறை என்றாலும் கூட, அவர்கள் விளக்கம் கொடுத்தனர்.

நிர்மலா சீத்தாராமன், ‘இது வரைவுக் கொள்கைதான், மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகுதான் அமல்படுத்தப்படும். தொன்மையான மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படும்’’ என்று கூறியிருந்தார். அதே போல், ஜெய்சங்கரும், ‘‘மனித வள மேம்பாட்டு அமைச்சரிடம் தரப்பட்டது வரைவுக் கொள்கைதான். அதில் மக்கள் கருத்து கேட்கப்படும். மாநில அரசுகளின் கருத்து கேட்கப்படும். எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது. எல்லா மொழிகளையும் மத்திய அரசு மதிக்கிறது’’ என்று கூறியிருந்தார்.

எனவே, தங்கள் துறையைத் தவிர தமிழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த 2 கேபினட் அமைச்சர்களுமே தனிக்கவனம் செலுத்துவார்கள் என்பதை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக, மற்ற துறை விஷயங்களில் அமைச்சர்கள் தலையிட மாட்டார்கள். ஆனால், இவர்கள் இருவரும் பிரதமர் அலுவலக உத்தரவின்படிதான், தமிழகம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்திற்கு 2 கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டு விட்டதாக பா.ஜ.க. மேலிடம் கருதுவதால், தற்போதைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கோ, அ.தி.மு.கவுக்கோ அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாது என்பது தெளிவாகிறது. அதே சமயம், இவர்கள் இருவரும் தமிழர்களாக இருந்தாலும் டெல்லியிலேயே வசிப்பவர்கள் என்பதால், தமிழ்நாடு விஷயங்களில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

மேலும், நிர்மலா சீத்தாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெய்சங்கர் இன்னும் எம்.பி.யாகவில்லை. குஜராத்தில் காலியாகவுள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவி அவருக்கு தரப்படலாம். அல்லது தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. விட்டு கொடுத்தால், இங்கிருந்து எம்.பி.யாகலாம். அப்படி தமிழக எம்.பி.யாகி விட்டால், அடிக்கடி வந்து தமிழ்நாடு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த வாய்ப்பிருக்கிறது.

More News >>