தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை பல்டி அடித்தது மத்திய அரசு.... வரைவு அறிக்கையில் திருத்தம்
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு .
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு திட்டம் தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்க இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டது.
மும்மொழிக் கல்வி கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக எதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுருந்தது. இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது.இந்தி மொழியை திணித்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசுத் தரப்பிலும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே நீடிக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திருத்தப்பட்ட கல்விக் கொள்கையை மத்திய அரசு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 3-வது மொழியாக இந்தி பாடம் பயில வேண்டும் என்பது கட்டாயமல்ல என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.