வில்லிவாக்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: தென்னக ரயில்வே தொழிற்சங்க தலைவர் வெட்டி கொலை
வில்லிவாக்கம்: தென்னக ரயில்வே தொழிற்சங்க தலைவர் புதியவன் என்பவரை இன்று காலை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, வில்லிவாக்கம் பகுதி, ஐசிஎப் சிக்னல் அருகே உள்ள பாட்டை சாலையை சேர்ந்தவர் ஜே.கே.புதியவன். இவரது மனைவி ரஞ்சிதா. இருவரும் ரயில்வே ஊழியர்கள். தென்னக தொழிற்சங்கத் தலைவரான புதியவன், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். மேலும், இவர் தென்னக ரயில்வே தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை புதியவனின் மனைவி ரஞ்சிதா வேலைக்கு சென்றுவிட்டார். மகள்கள் அக்ஷயா (16) மற்றும் அனுசுயா (14) ஆகிய இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து புதியவன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நேரத்தில் காலை 9 மணியளவில் புதியவனின் வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் சென்றது. இதில், இருவர் மட்டும் புதியவனை அழைத்துக் கொண்டு வீட்டின் மாடிக்கு சென்று பேசிக் கொண்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தீவிரமாகி கைகலப்பானது.
அப்போது, அந்த இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புதியவனை சரமாரியாக வெட்டிவிட்டு கும்பல் அங்கிருந்து தப்பியது.தலை, முகம், கைகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதை அடுத்து புதியவன் அலறல் சத்தத்துடன் மயங்கி விழுந்தார். புதியவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். பின்னர், புதியவனை மீட்டு ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி புதியவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டு அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கொலையாளியின் உருவம், அதில் பதிவாகி இருந்தது.
இதனால், கொலையாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், புதியவனிடம் கார் ஓட்டுனராக பணிபுரிந்த பாஸ்கர் தான் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.மேலும், பாஸ்கர் புதியவனிடம் கடனாக பணம் வாங்கியதாகவும், கொடுத்த பணத்தை புதியவன் பலமுறை கேட்டும் பாஸ்கர் திரும்ப கொடுக்கவில்லை எனவும் அதனால், இருவருக்குள்ளும் மோதல் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், பணத்தை திரும்ப கேட்ட புதியவனை பாஸ்கர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும், தலைமறைவாகி இருக்கும் பாஸ்கரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப்பில் இருப்பதால், அவருடைய எண் வைத்து கண்டுபிடிக்க போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் தீயாய் பரவியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.