10 மரக்கன்று நட்டால் துப்பாக்கி லைசென்ஸ்

துப்பாக்கி லைசென்ஸ் வேண்டுமா? 10 மரக்கன்று நட்டுவைத்து, அதை போட்டோ எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது தமிழ்நாட்டில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில்...

மத்திய பிரதேசத்தில் குவாலியர் மாவட்டத்திற்கு உட்பட்ட சம்பல் பள்ளதாக்குப் பகுதியில்தான் ஒரு காலத்தில் பூலான்தேவி தலைமையிலான கொள்ளைக்கும்பல் நடமாடியது. அந்தக் கும்பல் ஓடும் ரயில்களிலேயே கொள்ளை அடிக்கும். பின்னாளில், பூலான்தேவி சரணடைந்து தேர்தலில் போட்டியிட்டு, கடைசியில் கொல்லப்பட்டு விட்டார். அந்த சம்பல் பகுதியில் இப்போதும் பலர் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்வதுண்டு.

அதற்கு மாநில அரசிடம் முறைப்படி விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்று கொள்கிறார்கள். இந்நிலையில், துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை அந்த மாவட்டக் கலெக்டர் அனுராக் சவுத்ரி பிறப்பித்துள்ளார். இதன்படி, லைசென்ஸ் பெறுவதற்கு 10 மரக்கன்றுகளை நட்டுவைத்து, அதை ‘செல்பி’ (போட்டோ) எடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இது பற்றி, கலெக்டர் அனுராக் சவுத்ரி கூறுகையில், ‘‘மரக்கன்றுகளை அதிகமாக நடுவதற்கு மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஒன்றாக, துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு 10 மரக்கன்றுகளை நடும் நிபந்தனையை விதித்திருக்கிறோம்.

எனினும், உயிருக்கு ஆபத்து உள்ளவர்கள் உடனடியாக லைசென்ஸ் பெற நினைத்தால், லைசென்சை பெற்று கொண்டு குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் மரக்கன்று நட வேண்டும். மேலும், மரக்கன்று நடுவதற்கு சொந்த இடம் இல்லாதவர்களுக்கு, வருவாய்த்துறை நிலம் காட்டப்படும்’’ என்றார்.

More News >>