டெல்லி பஸ், மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு கட்டணம் இல்லை

டெல்லியில் அரசு பஸ்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றியது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூன்3) நிருபர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் மெட்ரோ ரயில்களிலும், அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான விரிவான திட்டத்தை 2 மாதங்களில் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்களின் பாதுகாப்பு கருதி, இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம். இந்த தி்ட்டத்திற்கு டெல்லி அரசு மானியம் வழங்கும்.டெல்லி மெட்ரோ ரயிலில் கட்டணத்தை உயர்த்திய போது, அதை குறைக்குமாறு மத்திய

அரசிடம் கோரிக்கை விடுத்தோம். கூடுதல் தொகைக்கான செலவை டெல்லி அரசே மானியமாக செலுத்தி விடுவதாகவும் கூறினோம். ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. இப்போது நாங்களே பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கிறோம். இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. மாநில அரசே தனது நிதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும்.

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார். ஏற்கனவே டெல்லி மக்களுக்கு மின்கட்டணத்தைக் குறைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>