மத்திய அரசு பல்டி ரஹ்மான் வரவேற்பு
இந்திய கட்டாயம் அல்ல என்று மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கையில் திருத்தப்பட்டதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்றுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கான வரைவு கொள்கை கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியானது. அதில் மும்மொழி பாடத் திட்டம் என்ற பெயரில் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையி்ல், இந்தி பேசாத மாநிலங்கள் சிலவற்றிலும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த, அமைதியான முறையில்தான் ஒரு மொழியை வளர்க்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தினால் அது சட்டத்திற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும். எங்களுக்கு கன்னடம்தான் அடையாளம். மற்ற மொழி விருப்பத்தின்பேரில் கற்பதுதான்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு இந்த எதிர்ப்புகளுக்கு பணிந்தது. புதியக் கல்வி வரைவு கொள்கையை திருத்தி, புதிய வரைவு கொள்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள் விரும்பினால் இந்தி கற்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ட்விட்டில், ‘‘அழகிய தீர்வு, தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.