பெண்ணை எட்டி உதைத்த பாஜக எம்.எல்.ஏ மன்னிப்பு

குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி தர்ணா செய்த பெண்ணை பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், அடித்து உதைத்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியதை அடுத்து, அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அகமதாபாத்தை அடுத்துள்ள நரோடா தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவாக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த பல்ராம் தவானி. ஞாயிறன்று அந்த தொகுதியைச் சேர்ந்த நீது தேஜ்வாணி என்ற பெண், பல்ராம் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்து, குடிநீர் இணைப்பு பிரச்னை தொடர்பாக கோரிக்கை விடுத்தார். பின்னர், அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது வெளியே வந்த எம்.எல்.ஏ. பல்ராம், அந்த பெண்ணை எட்டி உதைத்து அடித்தார். அவருடன் வந்த அவரது ஆட்களும் அந்த பெண்ணை அடித்தனர். நீதுவை மீட்க வந்த அவரது கணவரையும் அடித்தனர். இந்த காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து ஆன்லைனில் பரப்பினர். இது வைரலாக பரவியதை அடுத்து, தொலைக்காட்சிகள் அந்த பெண்ணை பேட்டி எடுத்து ஒளிபரப்பி, எம்.எல்.ஏ.வை போட்டுத் தாக்கினர். அந்த பெண் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராம்.

இந்த சம்பவம், வடமாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், அந்த பெண் நீது பேட்டியில், ‘‘மோடிஜி உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு இவ்வளவுதான் பாதுகாப்பா?’’ என்று கேட்டுள்ளார். இதனால், பா.ஜ.க. கட்சிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. பல்ராம் இன்று கூறுகையில், ‘‘நான் 22 வருடமாக அரசியலில் இருக்கிறேன். இப்படியொரு சம்பவம் ஏற்பட்டதே இல்லை. இந்த சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது. இதற்காக அந்த பெண்ணிடம் சென்று மன்னிப்பு கோருவேன்’’ என்று தெரிவித்தார்.

More News >>