டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் தயார் அரசு தகவல்
டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சில்லரை மதுவிற்னையையும் அரசே, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்(டாஸ்மாக்) மூலமாக மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை ஓட்டி, குடிப்பவர்களுக்காக பார்கள் நடத்தப்படுகிறது. இவற்றை தனியார் ஏலத்தில் எடுத்து நடத்துகிறார்கள். அவர்கள் அரசுக்கு குறைந்த பணத்தை செலுத்தி விட்டு, தண்ணீர் பாக்கெட், காகித கப், சிற்றுண்டி மற்றும் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர். மேலும், பார்களில் கிடைக்கும் காலிப் பாட்டில்களை எடுத்து விற்று கொள்கின்றனர்.
மேலும், அரசிடம் உரிமம் பெறாமலேயே பல இடங்களில் ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக பார்கள் நடத்துவதாகவும், அது பற்றி நன்றாக தெரிந்தும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையோ, டாஸ்மாக் நிர்வாகமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாமூல் வாங்கிக் கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்படும் டாஸ்மாக் பார்களை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும், பார்களை சுத்தமாக பராமரிக்கச் சொல்ல வேண்டும், நியாயமான விலையில் பொருட்களை விற்கச் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுடன் பிரபாகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்த உரிய சட்டத்திருத்தங்களை கொண்டு வருமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அவர்கள் அரசு தரப்பு வழக்கறிஞரிடம், ‘‘நீதிமன்ற உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை. சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லையா?’’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டத்திருத்தம் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி செயல்படுத்த போதிய கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசுக்கு 2 வார கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.