கூட்டணியால் பிரயோஜனமில்லை... அகிலேஷை கழட்டி விட மாயாவதி முடிவு
உ.பி.யில் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், சமாஜ்வாதி கட்சியை கழட்டி விட மாயாவதி முடிவு செய்துள்ளார்.
உ.பி.யில் பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கடந்த மக்களவைத் தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைத்தன. இரு கட்சிகளும் சரி சமமான தொகுதிகளை பங்கு போட்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்தன.
இந்தியாவின் மிகப் பெரும் மாநிலமான உ.பி.யில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது தான் கடந்த கால நிலவரம். 2014 தேர்தலில் இங்கு 73 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி மத்தியில் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறை பா.ஜனதாவை தோற்கடிக்க மாநிலத்தில் ஆட்சி செய்த இரு பெரிய மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி பா.ஜ.க.விற்கு கடும் சவாலாக இருக்கும் என பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் இம்முறையும் பா.ஜ.க 64 தொகுதிகளை கைப்பற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்கும் வியூகத்துடன் தொடங்கப்பட்ட மகா கூட்டணி, பாஜகவின் அலையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது. தேர்தல் தோல்வியால் விரக்தியடைந்துள்ள மாயாவதி, சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியால் தமது கட்சிக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். இன்று தோல்வி குறித்து கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியான யாதவ சமுதாய வாக்குகள், பகுஜன் கட்சிக்கு மட்டுமின்றி சமாஜ்வாதி கட்சிக்குக் கூட கை கொடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் இனிமேல் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் மாயாவதி.
இந்நிலையில் உ.பி.யில் எம்.எல்.ஏ.வாக இருந்த 11 பேர் எம்.பி.யானதால் அந்த சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலை தனியாகவே சந்திப்போம் என மாயாவதி கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.