தண்ணீர் பஞ்சமும் ... நாய் பட்ட பாடும்
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் படும் படாத பாட்டை, ஐந்தறிவு படைத்த நாய்ப் பிராணி சிம்பாலிக்காக காட்டுவது போல் அமைந்துள்ளது, மதுரை அருகே திருநகரில் எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்த இந்த வாயில்லா ஜீவன் தண்ணீர் குடத்தைக் கண்டவுடன் ஆவலாய் தலையை நுழைத்தது. தண்ணீர் இல்லை. குடத்தின் அடியில் கொஞ்சமாவது தண்ணீர் கிட்டாதா? என்ற நப்பாசையில் மேலும் தலையை உள்ளே விட்டது. ஆனால் தண்ணீர் சுத்தமாக கிடைக்கவில்லை.
சரி, நமக்கு தண்ணீர் யோகம் இல்லை என்ற விரக்தியில் தலையை வெளியே எடுக்க முயன்றது. பாவம், அந்த நாயின் தலையை வெளியே எடுக்க முடியாத அளவுக்கு குடத்திற்குள் சிக்கிக் கொண்டது. தலையை எடுக்க எவ்வளவோ போராடிப் பார்த்தும் அதனால் இயலவில்லை.
கடைசியில் விதி விட்ட வழி என்று தலையில் சிக்கிக் கொண்ட குடத்துடன், கண்ணும் தெரியாமல், செல்லும் வழியும் தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றி அலைந்தது அந்த ஜீவன். பரிதவித்த இந்த நாய்பட்ட பாட்டினை பலரும் வேடிக்கையாகப் பார்த்து, கை கொட்டிச் சிரித்தார்களே தவிர, அந்த ஜீவனுக்கு குடத்திடம் இருந்து விடுதலை கொடுக்க வேண்டுமே என்ற அக்கறை யாருக்கும் வந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில், சமூக அக்கறை கொண்ட பத்திரிகை நண்பர்கள் சிலர் நின்றிருந்த இடமருகே நாய் ஓடி வர, விடுதலை கொடுத்தால் கடித்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு வழியாக அந்த நாய்க்கு குடத்திடம் இருந்து விடுதலை கொடுத்தனர். நாய் நன்றியுள்ளது என்பதை உண்மை என்று நிரூபிப்பது போல், அந்த ஜீவன், தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல் அவர்களின் காலை சுற்றிச்சுற்றி வந்து விட்டு பின்னர் ஓடி விட்டது.இதைத் தான் நாய் பட்ட பாடு என்பார்களோ?